Wednesday, April 6, 2011

தேடல்

 (Disclaimer: இந்தப் பதிவில் வருகின்ற சம்பவங்கள், கதாபாத்திரங்கள் " நான் " உட்பட அனைத்தும் கற்பனையே. எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறித்தது  அன்று. எதனோடும் பொருந்தி வந்தால் அது தற்செயலாய் நிகழ்ந்ததே !)

ந்தக்  கும்மிருட்டில் இருண்டுப் போய் இருந்தது வானம் மட்டும் அல்ல ..என் மனமும்தான்.  என்னடா வாழ்க்கை இது? ...எத்தனைப் போராட்டம்? என்று  என்னையே நான் சலித்துக் கொண்டேன் . அன்று நடந்தச் சம்பவங்களும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் உடலையும் மனதையும் அசதியாக்கி என்னை, அந்தப் படுக்கையில் சென்று போட்டது . என் மனதும் நடந்தவற்றை அசை போட ஆரம்பித்தது.

அந்தச்  சம்பவம் என்னை மட்டுமல்ல ..ஒட்டு மொத்த மனித சமுதாயத்தையும்  அச்சப்படுத்திய பயங்கரமான சம்பவம்.

வழக்கம் போல் பணி செய்துக் கொண்டு இருக்கும் போது ...திடீரென்று மொத்தக் கட்டிடமும் ஆட்டம் கண்டது. நாங்கள் அனைவரும் ஆடிப் போய் விட்டோம் ..வேக வேகமாக பாதுகாப்பான பகுதிக்கு செல்ல முயன்ற போது ..கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழவே , என் கண் எதிரேயே பலர் அதில் சிக்கிப்  பலியாகிக் கொண்டு இருந்தனர். அடுத்த சில நிமிடத்தில் வந்த ஆழிப்பேரலை பேரரக்கன் போல பல மைல்கள் தூரம் நகரத்துக்குள்  வந்துஎதிரே பட்ட அனைத்தையும் துளிக் கூட இரக்கம் இன்றி  உருட்டிச் சுருட்டிச்   சென்றது.

உழைப்புக்கு என்றே உருவெடுத்த அந்த தேசத்தை  இயற்கை சீற்றம் முற்றிலுமாக வெற்றிலைப் போட்டுத் துப்புவது போல் துப்பிச் சென்றிருந்தது. ஆயிரக்கணக்கனோர் வீடுகள் இழந்து , உறவினர்களை இழந்து , வாழ்க்கை மற்றும்  உயிரையும் இழந்து இருந்தார்கள். உதவுவதற்கு உலகமே துடித்தாலும் போன உயிர்ப்  போனதுதான்.

நடந்த சம்பவம் உலக நாடுகளுக்கெல்லாம்  ஒரு எச்சரிக்கை மணி போல அமைந்து விட்டது.

இயற்கைதன்னை மதிக்காதவனை இயற்கையும் மதிப்பதில்லை  போலும் .

படுக்கையில் படுத்தாலும் தூக்கம் வரவில்லை .I-Pad மூலம் பெறப்பட்ட  பிளாஷ் நியுஸ் இன்னும் பயத்தை அதிகப்படுத்தி இருந்தது ... சொந்த நாட்டிற்கு உடனடியாக கிளம்லாம் என்று நினைத்தால் அதற்கும் வழியில்லை.

ஊருக்குத் தகவல் சொல்ல அலைபேசியும் உதவவில்லை ஆனாலும்  I-Pad  மூலம் தகவல் அனுப்பிய படி இருந்தேன் .

இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அணு உலை,  எந்த நேரத்திலும் கதிர்வீச்சை வெளியிடலாம் என்ற செய்தி ஒட்டு மொத்த மக்களின் இதயத்துடிப்பை வேகப்படுத்தி இருந்தது.

*****
நான் வேலைக்காகப்  பயணித்த போது  "கண்ணா! கொடுத்து  வச்சவண்டா நீ !  வெளி நாட்டுக்கு கிளம்புற ...என்ஜாய்  ! " என்று உற்சாகமாக நண்பர்கள்  வழி அனுப்பினார்கள்.

பிறந்தது முதலே எனக்கு எந்தக் கவலையும் இல்லை . எனக்கு கேட்டதை வாங்கித் தர என்  பெற்றோர் மறுத்தது இல்லை . செல்வச் செழிப்பில் தான் வளர்ந்தேன் . படிக்கும் போதே பாக்கெட்டில் நிறையப் பணம் புரளும் .  நண்பர்களுக்காக நிறைய செலவழிப்பேன் .  ஊர் சுற்றியக் காரணத்தால் பன்னிரண்டாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்தான் வாங்கி இருந்தேன் . இருந்தாலும் அப்பா எனக்கு ரூ 8 இலட்சம்  செலவு செய்து அந்த மிகப்பெரிய கல்லூரியில் பொறியியல் படிக்க வைத்தார்.  அம்மா எப்போது பார்த்தாலும் கோவிலும் , குளமுமாகச் சுற்றி வருவார் . என்னையும் பிரகாரம் சுற்றச்  சொல்வார். எனக்கு அதில் எல்லாம் கொஞ்சமும் நாட்டம் இல்லை. நான் கேட்டச்  சில கேள்விகளுக்கு சரியான விளக்கம் கிடைக்காததால்.. எனக்கு என்னவோ அவர்கள் செய்கையில்  ஒரு பிடிப்பும் வரவில்லை .

கையில் பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற ஒரு விஷயத்தை அப்பா எனக்குச்  செய்யும் உதவிகளில் இருந்து புரிந்துக் கொள்ள முடிந்தது .  கேட்டதெல்லாம் கிடைத்தது. வாழ்க்கை என்பது வசந்தமாகவே இருந்தது.

எனது கல்லூரி வாழ்க்கை  எண்ணற்ற நண்பர்கள் புடை சூழ மகிழ்ச்சியாகச் சென்று கொண்டு இருந்தது. திடீரென்று பட்ட  படிப்பும்  முடிந்து விடவே ...  வேலைக்குச் செல்ல வேண்டும் என்று..ஒரு நிறுவனத்தின் கேம்பஸ் செலக்க்ஷன் தேர்வில் கலந்து கொண்டேன் . என்னை ஒரே ஒரு கேள்விதான் கேட்டார்கள், தேர்வும் செய்து விட்டார்கள். என்னோடு படித்த பலர் இன்றும் வேலை கிடைக்காமல் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் .

ஏன் இப்படிக் கஷ்டப்படுகிறார்கள்? என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

வேலை கிடைப்பதற்கான பல ஆலோசனைகளை அவர்களுக்குக்  கொடுத்துள்ளேன்.

நேர்முகத் தேர்வில் எனக்கு  கேட்கப்பட்டக்  கேள்வி உனக்கு அம்மா பிடிக்குமா ? அப்பா பிடிக்குமா?” என்பதுதான்.

நான் யாரைப் பிடிக்கும் என்று சொல்லி இருப்பேன் என்பது உங்களுக்கே நன்றாகத்  தெரிந்திருக்கும். ஆம்! உங்கள் கணிப்பு மிகச்சரியானதே! அப்பா பிடிக்கும் என்றேன். உடனே எனக்கு அங்குப் பணியாற்ற உத்தரவும்  தந்து விட்டார்கள் .

வேலை என்பது இவ்வளவு எளிதாகக்  கிடைக்கும் போது இவர்கள் ஏன்  இப்படி கஷ்டப்படுகிறார்கள் என்று  எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

சென்ற வாரம் அப்பாவிடம் இருந்து இமெயில் வந்து இருந்தது. அப்பா கூட எனக்காக இன்டர்நெட் எல்லாம் கற்றுக்  கொண்டார்கள். எனக்குப் பெண்பார்த்து விட்டார்களாம் .  எத்தனையோ பெண்களை இங்குப்  பார்த்தாயிற்று ..இது பெற்றோர் பார்த்த பெண் ..இருந்து விட்டுப்  போகட்டும் என்று ஒத்துக் கொண்டு இருந்தேன் .

அடுத்த முறை ஊருக்கு வந்து பணிக்குத் திரும்பும் போது அநேகமாக எனக்குத் திருமணமாகி இருக்கும் .

அம்மா உனக்குப் பார்த்து வச்சிருக்கிற பொண்ணு சும்மா சினிமா ஸ்டார் மாதிரி இருப்பாள்என்று நண்பர்கள் வேறு என்னை உசுப்பேற்றிவிட்டு இருந்தார்கள்.

ஒரு திரில்லுக்காக இன்னமும் அந்தப் பெண்ணின் முகத்தைக் கூட நான் பார்க்கவில்லை.... பேசவும் இல்லை .

இந்தக் கால்கட்டு விவகாரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் ...நம்ம பெற்றோருக்காக இந்த ஒரு விசயத்தையாவது ஒத்துக் கொள்வோம் என்று ஒத்துக் கொண்டு இருந்தேன்!

மச்சான் நீ எல்லா விசயத்திலும் கொடுத்து வச்சவன்டா?” என்று நண்பர்கள் இப்போதும் சொன்னது எனக்குப் பெருமிதமாய் இருந்தது.

*****
கவலை , அச்சம் எதுவும் இல்லாமல் சுற்றி வந்த எனக்கு இன்றைய சம்பவம், நடுக்கத்தைத் தந்து இருந்தது. கை நிறையப்  பணம் என்னிடம் இப்போது இருந்தும் பசிக்குச் சாப்பிட உணவு கிடைக்கவில்லை. பணத்தால் எதையும் வாங்கலாம் என்ற மிதப்பில் இருந்த எனக்கு அன்று கிடைத்த அடி மிகப்பெரிய அடிதான். ஒரு ஹோட்டல் கூட அங்கு திறந்து இருக்கவில்லை . வெளியில் செல்ல வண்டியும் இல்லை . ஊருக்குத் திரும்பவோ விமானப் போக்குவரத்தும் இல்லை. போக்குவரத்து முற்றிலுமாக  துண்டிக்கப்பட்டு இருந்தது . சாலைகள் பிளந்துப் போய் கிடந்தது .  

நான் தங்கி இருந்த அடுக்குமாடி விடுதிக்கு அருகில்தான் அணு உலை இருக்கிறது .  பாதுகாப்பு வீரர்கள், வேக வேகமாக மக்களை அங்கிருந்து வெளியேற்றிக் கொண்டு இருந்தார்கள்.

இந்த நேரத்தில்தான் அந்தக் கொடிய அறிவிப்பு வந்தது.

இன்னும் இரண்டு மணி  நேரத்தில் அந்த உலை முழுவதுமாக வெடிக்கும் என்றும், கதிர்வீச்சின் தாக்கம் மிகப் பயங்கரமாக இருக்கும் என்றும் கிட்டத்தட்ட  இருபது ௦௦ கி.மீ வரைக்கும் அது தாக்கும் என்றும் அபாய மணி எழுப்பப்பட்டது .

என் சப்த நாடியும் ஒடுங்கிப் போய் விட்டது .

கதிர் வீச்சால் தாக்கப்பட்டால் அது எவ்வளவுக்  கொடுமையாக இருக்கும் என்பது எனக்கு மிக நன்றாகத் தெரியும். அத்தனைக்கும் அது மிகவும்  பாதுகாப்பான  உலகத்தரம்மிக்க அணு உலை . எல்லாவற்றையும் மீறி இந்தச்  சம்பவம் நிகழ்ந்து உள்ளது .

இங்கு இருந்து உடனடியாகக் கிளம்பிட வேண்டும் ! இருக்கும் ஒவ்வொரு மணித்துளியும் உயிருக்கு ஆபத்துதான்.

வண்டியும் இல்லை, ஒன்றும் இல்லை, என்ன செய்வது ? என்றே தெரியவில்லை .. எங்குத்  திரும்பினாலும் மரண ஓலம்! நவீனமான அந்த நகரம் நரகத்தின் வேதனைப்  போல , அழிவுப் பிசாசின் கையில் சிக்குண்டது போல் காட்சி அளித்தது .

மிச்சம் இருப்பது இன்னும் ஒன்னே முக்கால் மணி நேரம்தான். உடனடியாய் இங்கு இருந்து தப்பிக்க நான் செயல் பட வேண்டும் !

எதிரே எரியும் அணு உலையின் வெளிச்சம் எங்கள் பகுதிக்கு கொஞ்சம் ஒளியை வழங்கிய படி இருந்தது .

தகவல் தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டது .

யோசிக்க கூட இனி நேரம் இல்லை.அப்பா!!!! என்று ஓங்கிக் கத்த வேண்டும் போல இருந்தது .. காப்பாற்ற வந்த ஹெலிகாப்டர்கள் கூட இந்த திடீர் அபாய அறிவிப்பால் திரும்பிச் செல்ல ஆரம்பித்து விட்டது .

அங்கு இருந்த வாகனங்களில் எல்லாம் அனைவரும் ஏறி தப்பித்துச் செல்ல முயன்றனர் .  இடிந்து போன சிதைந்து போன சாலைகள் ,வண்டியை ஓட்டிச் செல்ல உகந்ததாய் இல்லை.

அன்பு , உதவி என்பதை எல்லாம் கடந்து கதிர் வீச்சில் இருந்து உயிரைக்  காத்துக் கொள்வதே தலையாய்ப் பட்டதால் மக்களோடு மக்களாக நானும் ஓட்டம் எடுத்த படி இருந்தேன் . 

நாக்கு வறண்டுப் போய் விட்டது . அவ்வப்போது பூமி...தன் கோபம் இன்னும் குறைந்தபாடில்லை என்று குலுங்கிக் கொண்டிருந்தது.

அணுக்கதிர் வீச்சுப் பாதிப்பில் இருந்து உயிரைக் காத்துக்கொள்ள இருபது  கிலோ மீட்டரை இரண்டு மணி நேரத்தில் நான் ஓடியேக் கடப்பது என்பது சாத்தியமே இல்லாதது .

மணிக்கட்டு கடிகாரமோ இன்னும்  பத்து நிமிடத்தில் அந்த அணு உலை வெடிக்கும் என்பதை உணர்த்தியது.  நான் இன்னும் கடக்க வேண்டிய தூரமோ  என்னவென்று தெரியவில்லை.

எல்லாத் திசைகளிலும் மக்கள் உயிரைக் காத்துக் கொள்ள மரணவேகத்தில் ஓடியபடி இருந்தனர். சிலர் மயங்கி விழுந்தனர் . 

எனக்கு அப்பா முகம் நினைவில் வந்தது .. அம்மா முகமும் நினைவில் வந்தது . இப்படி அனாதையாய் மண்ணோடு மண்ணாகப் போகிறேனே என்பதை நினைத்துப் பார்த்து கண்ணீர் கொட்டோ கொட்டென்று கொட்டியது.

அம்மா ஏதோ சொல்வியே சாமீன்னு  ..அவர் எங்கேமா போனார்  ?”  என்று கேட்க வேண்டும் போல் இருந்தது .

மச்சான் நீ கொடுத்து வச்சவண்டா என்று நண்பர்கள் சொல்லி என்னை வழி அனுப்பியது இப்போது என்னைக் கேலி செய்வது போல் ஒலித்தது.

 ஓடி ஓடி நானும் ஓய்ந்துப் போய் இருந்தேன் ...என்னால் இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது ..கண்கள் இறுகியது ....தலையோ சுற்றியது.. என் கதை அவ்வளவுதான் . எது நடக்கக் கூடாது என்று நான் எதிர்பார்த்தேனோ இன்னும் சில மணித்துளிகளில் நடக்கப் போகிறது.

இந்நேரம் பார்த்து ஒரு பலத்த சப்தமும் ..ஒரு கனமான அடியும்  என் மேல் விழுந்தது .

*****
 எங்கு இருந்தேன் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்கு எதிரே இருந்தவர் மிகவும் பழகியவர் போல் காணப்பட்டார் . அவரைச்  சுற்றி கொஞ்சம் பேர் இருந்தார்கள் . அனைவரும் நல்ல ஒளி பொருந்திய உடலுடன் (தேஜஸ்) காணப்பட்டார்கள்.

அவர்களின் வெண்மையானத்  தூய்மையான ஆடையும் , ஒளிவீசும் கண்களும் அவர்கள் மீது எனக்கு மிக்க மரியாதையை ஏற்படுத்தி இருந்தது .

என்னருகே இருந்தவர் சாப்பிட உணவு கொடுத்தார் .
 ஒரே மூச்சில் அனைத்தையும் உண்டு விட்டேன் .. ஆளையே விழுங்கி விடும் அகோரப் பசி அடங்கிப் போய் இருந்தது. இப்படி ஒரு அமுதத்தை நான் வாழ்க்கையில் உண்டதே இல்லை.

நீங்கள் யார் ? என்று கேட்டேன் .

மெல்லியப் புன்னகை செய்தார்.

அவர்கள் அறையின் மணம் அம்மாவின் பூஜை அறையை நினைவுப் படுத்தியது .

"நீங்கள் அனைவரும் பார்க்க ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள் போல  இருக்கிறது"  ... என்றேன் .

மீண்டும்  புன்னகைத்தார்.

எனக்கு நினைவு கொஞ்சம் பின்னோக்கிச் சென்றது.

நான் இப்போது உயிரோடு இருக்கிறேனா ..இல்லையெனில் இறந்து விட்டேனா ..ஒரு வேளை  சொர்க்கம், நரகம் என்றெல்லாம் சொல்வார்களே அது போன்ற இடத்தில் இருக்கிறேனா? என்று வெள்ளித்திரையில் காட்டுவது  போல என்னைக் கொஞ்சம் கிள்ளியும் பார்த்துக்  கொண்டேன் . 

ஆ ! வலித்தது ...கொஞ்சம் பலமாகவே கிள்ளி விட்டேன் .

அவர், அதைக் கவனித்து புன்னகைத்தார்.

புழுவைப் போல் கிடந்த என் மீது அவர் கருணையோடு ... ங்களுக்கு என்ன ஆயிற்று என்றுக்  கேட்டார்?”  

நான் நடந்த சம்பவங்களை எல்லாம் மூச்சு விடாமல் சொல்லி முடித்தேன் .

ஹும் ...என்று வெறுமனே தலையை அசைத்தார்.

என்னங்க எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து தப்பிச்சு வந்திருக்கேன் ..நீங்க இப்படி ரொம்ப லேசா எடுத்துக்குறீங்களே,  என்றுக்  கேட்டேன் .

அதற்கும் ஒரு சிரிப்பு சிரித்தார் .

நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்தானே ?”

ம் !என்றார் அவர் .

எனக்கு அதைப் பற்றி எல்லாம் நம்பிக்கையோ எதிர்ப்போ கிடையாது ... உங்கள் கடவுள் உண்மையாகவே இருக்கிறார் என்றால் இப்படி இலட்சக்கணக்கான மக்களை ஒரே சமயத்தில்  செத்து மடியச் செய்து இருப்பாரா ?”  என்று கடுமையாக என் கேள்வியை வீசினேன்.

சோறு போட்ட இடத்தில் இப்படி வீறு கொண்டு எழுவது முட்டாள்தனம்தான் ..என்று மனதுக்குள் என்னை நொந்து கொண்டேன் .

ஆனால் அவர் முகத்தில் கோபத்திற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. அமைதியான மாறாத புன்னகையுடன் காணப்பட்டார். 

"அப்போ, கடவுள் இருக்காருன்னு நீ ஒத்துக்கிறீங்களா?" என்று கேட்டார் அங்கு இருந்த இன்னொரு பெரியவர் .

எனக்குத் தெரியலநீங்கதான் கடவுளை நம்புறீங்களே..என்னை விட்டு  விடுங்கள், உங்களுக்காகவாவது, கடவுள் எல்லாரையும் இந்தத் துன்பத்தில் இருந்து காப்பாற்றி இருக்கலாமே ?"  என்றுக்  கேட்டேன் .

என் அருகே இருந்தவர் . உங்களுக்கு முடிவாக என்னதான்  தெரிய வேண்டும்?” என்று கேட்டார்.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா ?”  என்றேன்.

அத்தனை பேரைக் காப்பாற்றாதக்  கடவுள் உங்களை மட்டும் காப்பாற்றிட்டார்ன்னு சொன்னால் நீங்கள்  ஒப்புக் கொள்வீர்களா ?”  என்று கேட்டார் அவர்.

எனக்குத்  தெரியலைங்க ....ஏதோ அதிர்ஷ்டவசமா நான் தப்பிச்சுட்டேன்!என்றேன்.

அவர்கள் மீண்டும் ஒரு சிரிப்புச் சிரிக்க எனக்கு கொஞ்சம் தர்ம சங்கடமாக இருந்தது.

சரி ..நீங்க சொல்லுங்க ...நான் கேட்டுக்குறேன்என்றேன் .

தம்பி! நாங்க சொல்லி நீங்க  கேட்டுக்குற விஷயம் இல்லை இது ..”  என்றார் அவர்.

அப்படின்னா யாரு சொல்லுவாங்க !

நீங்க யாரு சொன்னா கேட்டுப்பீங்க?”  என்று அவர் திருப்பி கேட்க .

எனக்கு யார் பேரைச் சொல்வது என்றே  தெரியவில்லை ...

நான் குழம்பிப் போய் இருந்ததை அவர்கள் நன்கு கவனித்து இருக்கிறார்கள் .

ம் ம்..யாரு சொன்னாலும் நமக்கு சந்தேகம் விலகாது. என்றார் அவர்.

"அப்போ  நான் என்ன பண்ணனும் ?" என்றேன்.

எனக்கே என்னைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது  ...என்னடா இது? .. வயசுப் பருவத்தில் வெள்ளிக்கிழமை கூட கோயிலுக்கு ஒதுங்காத நான்  ..வந்த இடத்தில்  கடவுள் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறேன் என்று யோசிக்கலானேன்.

நான் என்ன பண்ணனும் சொல்லுங்கஎன்று என் கேள்வியை கொஞ்சம் ஆழப்படுத்தினேன் .

இது நல்ல கேள்வி ...இதற்கு கூட எங்களுக்குப் பதில் தெரியாதுஎன்று மீண்டும் புன்னகைத்தார் .

அப்படீன்னா ?”

கடவுளே வந்து நான் இந்தா இருக்கேன்னு தரிசனம் கொடுத்தால்தான் நம்மளால எதையும் புரிஞ்சுக்க முடியும்.

அது எப்படிங்க ..ஒருத்தர் வந்து நான்தான் கடவுள்னு  சொன்னா எப்படிங்க நம்புறது?”

தம்பி ! உன்னையும் என்னையும் படைச்ச அம்மாவுக்கெல்லாம் அம்மாவான, அப்பாவுக்கெல்லாம் அப்பாவான கடவுள், தான்தான் வந்து இருக்கிறேன் என்பதை உனக்குப் புரிய வைக்க எவ்வளவு நேரம் ஆகும் ?”  என்று அவர் திருப்பி கேட்டக் கேள்வியில் ...எனக்குப் புதிதாய் ஒரு நம்பிக்கை பிறந்து இருந்தது .

ஆஹா சரியா சொன்னீங்க ...  நான் அதுக்கு என்ன பண்ணனும் சொல்லுங்க ...என்று அவர்களை விடாப் பிடியாய்ப்  பிடித்தேன்.

பெரியவங்க காலம் காலமா சொல்லுகிற ஒரு சிறப்பான வழி இருக்கிறது

அது என்ன வழிங்க ப்ளீஸ் ! என் ஆர்வம அதிகமானது .

சுவாமி நாமத்தை ஜெபம் பண்ணு ! என்றார் அவர்.

எனக்குத்தான் ஒரு சாமியும் தெரியாதே ... இப்போது என் கேள்வி கிண்டலோடு இல்லை. உண்மையானத்  தேடலோடு இருந்தது.

அப்படியா ..பரவாயில்லை ...ஏதாவது ஒரு சுவாமி நாமத்தை சொல்லியபடி இரு அல்லது கடவுளைக்  குறித்து தியானித்தபடி இரு  ...உனக்கு அவரது தரிசனம் கிட்டும் போது ...உன் சந்தேகங்கள் எல்லாம்  விலகிவிடும் ..எல்லாம் அவரிடமே  கேட்டுக் கொள்என்றார் அவர்.

இதெல்லாம் சாத்தியமாங்க? ...ப்ளீஸ் சொல்லுங்க! என்று ஒரு ஏக்கத்தோடு கேட்டேன் .

சத்தியம் ! என்று சொல்லி எழுந்தார் அவர்.

அவரது வார்த்தைகளில் சத்தியமும் கம்பீரமும் அன்பும் கலந்து இருந்தது .

அவரது சொற்கள் என் இதயத்தைப் பிழிய ஆரம்பித்தது . பூகம்ப நிகழ்வுகள் எங்கேயோ புதைந்துப் போய் இருந்தது .. உடல் எங்கும் புதிய உணர்வு கிளம்பலாயிற்று.

அவர்கள் எல்லோரும் சரி நாங்கள் கிளம்புகிறோம் என்று சொன்னார்கள் .

ஏங்கே போறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா ?” என்று  பதறினேன். அவர்களோடே இருக்க வேண்டும் என்பது போன்ற ஏக்கம் எப்படி என்னுள் ஏன் எழுந்தது என்றே தெரியவில்லை.

சத்சங்கம்  என்றார் அவர் .

அப்படீன்னா ?” என்று கேட்டேன்.

இப்போ உங்களுக்கும் எங்களுக்கும் கடவுளைப் பற்றி பேச வாய்ப்பு கிடைத்ததே அதுவேதான்”  என்று சொன்னார் .

ப்ளீஸ் .. ப்ளீஸ் .. நானும் உங்களோடவே வந்திடுறேன்என்று சொல்லி நான் எழுவதற்குள் அவர்கள் அந்த அறையை விட்டுக் கிளம்பி இருந்தார்கள் .

மானசீகமாக அவர்களுக்கு நன்றி சொன்னேன் .  அவர்களின் மலர்ந்த முகம் என் மனம் முழுக்க நிரம்பிப் போய் இருந்தது . 

அவர்கள் சொல்வது முழுக்க முழுக்கச் சத்தியம் என்று புரிந்தது!

சரி ..நான் எங்கே இருக்கிறேன்? எப்படி நான் இங்கு வந்தேன்? என்று நான் இருந்த இடத்தை சற்று உற்று நோக்கினேன் .

*****
என்ன.... கண்ணா.... இன்னும் கிளம்பலையா ... ரொம்ப ஆழ்ந்து  தூங்கிட்டே போலிருக்கு ...உன் நண்பர்கள் எல்லாரும் உன்னைப் பார்க்க வீட்டுக்கு வந்திருக்காங்க”  என்று அம்மா கையில் காபியோடு எழுப்பினார்கள் .

எதுக்குமா வந்திருக்காங்க ..?

என்னடா இப்படி கேட்குறே ... உனக்கு வெளிநாட்டிலே வேலை கிடைச்சி நாளைக்கு விமானத்திலே அங்கு  பயணமாகப் போறீயே ...அதுக்காக உன்னை வழி அனுப்ப வந்திருக்காங்க 

கையில் காபியோடு வரவேற்பு அறைக்குச் சென்றேன் ...

நண்பர்கள் என் கையில் மலர்க்கொத்துகள்  தந்து மச்சான் நீ ரொம்ப கொடுத்து வச்சவண்டா  என்றனர் .

ஆஹா அதே வார்த்தை ....அந்த வார்த்தையைக் கேட்டதும் நினைவுகள் அனைத்தும் சற்று முன் எனக்கு நடந்த அந்த அனுபவத்தை அசை போடலாயிற்று .

ஆமாம் ...நான் கொடுத்து வச்சவன்தான் இனி நான் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை கிடைத்து விட்டது .

வெளிக்கவர்ச்சிகள் இனி எனக்கு ஒரு விஷயம் இல்லை.  இறையைக் காணாது  இந்த தேகம் இனி பயன் பெறப்போவது இல்லை .

எந்த நிமிடமும்  எந்த நொடியும் எதுவும் நிகழலாம் .. இது ஒரு எச்சரிக்கை மணிதான்!

வாழும் போதே விடை கிடைக்க வேண்டும் ..

மீண்டும் பிறப்பதில் இனி என்ன இலாபம் .?

நாமத்தை சொல்! பாவத்தை வெல்! என்று மனதிற்குள் கூறிக்கொண்டேன்.

அழிவற்ற ஆனந்தம் நோக்கி என் தேடல் அன்றே துவங்கியது!

-நம்பிக்கை ராமா

***
Load Counter
spa equipment wholesale