Wednesday, June 5, 2013

Tuesday, May 28, 2013

நாய் விற்றக் காசு

 
நாய் விற்றக் காசு குரைக்காது
மீன் விற்றக் காசு நாறாது!
கூவத்தில் குளித்த
ஐந்து ரூபாய் நோட்டும்
கோபுரத்தில் வைத்துக்
கொண்டாடப் படும் இங்கே !
இழவு வீட்டிலும் இதற்கு
ராஜ மரியாதை !
எங்கும் இதற்குத்
தீட்டு  இல்லை !
சாதி மதங்கள் எல்லாம்
இதன் விசயத்தில்
சமத்துவம்  ஆகி விடும்!
அக லட்சணம்
இல்லா விடினும் ...
லட்சங்களோடு இருந்தால்..
அழுக்காச்சீ  லட்சுமியும்
மக்கள் போற்றும்
மஹாலட்சுமிதான் காண் !
  --- நம்பிக்கை ராமா

Sunday, May 26, 2013

ஸ்டார்ட் தி மியூசிக் :-) I got a Job

எனது அலுவலக நண்பர் ஒருவரின்  வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை ( 2004 ம் வருடம் ) எப்போது நினைத்தாலும் எனக்குச் சிரிப்பு வரும். அந்த சம்பவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
என் நண்பர் B.E முடித்த பின்னர் வேலை தேடும் படலத்தில் இருக்கும் போது, ஒரு நாளிதழில் மிகப் பிரபலமான டெலிகாம் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு செய்தியை பார்த்து நேர்முகத்தேர்வுக்கு சென்றிருந்தார்.கல்வித்தகுதி B.A.,B.Sc,M.A, B.E,MBA என்று ஒரு படிப்பு விடாமல் போட்டிருந்தார்களாம். எல்லா வேலைக்கும் சேர்த்து நேர்முகத்தேர்வு நடக்கிறது என்று நினைத்தாராம்.

திநகர் .ஹபிபுல்லா ரோட்டில் ஒரு பெரிய மாளிகையில் அந்த நேர்முகத்தேர்வு என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. வேலை தேடி பெரும் கூட்டமே அங்கு இருந்தது .நம்ம நண்பரும் ஏகப்பட்ட எதிர்பார்போடு ஏக்கத்தோடு குறித்த நேரத்திற்கு ரேமாண்ட்ஸ் மாடல் மாதிரி சென்று இருந்தார். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு செல்லாததால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

துவண்ட போன நண்பர், நிறுவனத்தாரிடம் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி பெற்று, வேகவேகமாக அருகே இருந்த கோனிகா லேப் சென்று 10 நிமிடத்தில் கிடைக்கும் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் நேர்முகத் தேர்விற்கு சென்றிருக்கிறார்.

அவரது ஆர்வத்தைக் கண்டு  உடனே முதல் கட்டத் தேர்வில் தேர்வு செய்து விட்டார்கள்!

அடுத்தக் கட்டத் தேர்வுக்கு ஆயத்தமானார்.

ஒரு பெரிய குண்டு மனிதர் அவரை நேர்முகத் தேர்வு செய்தார். அவர் அந்த நிறுவனத்தில் சேர்ந்து வேலை செய்தால் கிடைக்கும் வளர்ச்சி பற்றி விவரித்து இருக்கிறார்.

என் நண்பரும்.. 5 வருடத்தில் ஒரு மேனஜர் ஆகிவிடலாம் என்ற கனவில் அந்த நேரம் முதலே மிதக்க ஆரம்பித்து இருக்கிறார்.

நேர்முகத்தேர்வின் முடிவை மறுநாள் அறிவிப்பதாய் சொல்லி விட்டார்கள்.
நண்பர் பார்க்க நல்ல உயரமாக பர்சனாலிட்டியாக இருப்பார், முதல் வேலையில் கிடைக்கும் முதல் சம்பளத்தை என்ன செய்வது என்றெல்லாம் கற்பனையில் ஆழ்ந்து ஆழ்ந்து அவரது தூக்கம் கெட்டுப்போய் கண்கள் சிவந்து போய் கனவுகளோடு  இருந்தார்.
மறுநாள் விடிந்தது. "கடவுளே கண்டிப்பாய் இந்த வேலை எனக்கு கிடைச்சிடனும்" என்று எல்லா தெய்வத்தையும் வணங்கியபடி பயபக்தியோடு அவர்களின் வேலைக்கான அழைப்பு  வருமா? வராதா? என்று காத்து இருந்தார் நண்பர்.
நண்பரின் நம்பிக்கை வீண் போக வில்லை,அந்த டெலிகாம் கம்பெனியில் இருந்து அழைப்பு வந்தது. உடனடியாக வரும்படி சொன்னார்கள்.
துள்ளிக் குதித்தார் நண்பர் ( அவரே நல்ல உயரம்,, அவர் குதித்து இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்த எனக்கே சிரிப்பு வந்து விட்டது) .. அப்பா அம்மாவிடம் ஓடிச்சென்று தனக்கு வேலை கிடைத்த செய்தியை சொல்லி .. நண்பர்களிடம் எல்லாம் தொலைபேசி மூலம் சொல்லிவிட்டு வேலையில் சேருவதற்காக விரு விரு என்று தனது பைக்கில் கிளம்பலானார்.
இவரைப்  போல் ஒரு 15 பேரை தேர்வு செய்து இருக்கிறார்கள். மிகுந்த உற்சாகத்தோடு அனைவரும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
ஒரு 23 வயது நவநாகரீகப்  பெண் இவர்கள் அனைவரையும் அழைத்து, " சரி வாருங்கள் நாம் பயிற்சிக்கு (On the Job Training) செல்லலாம் என்று அழைத்து இருக்கிறாள்.
நம்ம நண்பரும் உற்சாகமாக அந்த பெண் பின்னே சென்றார்.:)
அனைவரையும் அழைத்துக் கொண்டு தி.நகர் முக்கியப் பகுதியில் இருக்கும் ஒரு பெட்டிக்கடைக்கு அழைத்துச்  சென்றாள் அந்தப்  பெண்.
"ஓ! வெயில் கொடுமைக்கு குளிர்பானம் கொடுக்கப் போறாங்க என்று நினைத்து 7 up ஐ ஒரு லுக் விட்டபடி இருந்திருக்கிறார் நண்பர்.
அந்த இளம் பெண் இவர்களை நோக்கி , " இதோ பாருங்கள் என்னை அப்படியே கவனித்துக் கொள்ளுங்கள், இதைப்போலவே நீங்களும் நம் வியாபாரத்தைப்  பெருக்க வேண்டும் என்று சொன்னபடி ...தனது அழகிய பையில் இருந்து கொண்டு வந்திருந்த SIM CARD ஐ எடுத்து பெட்டிக் கடைக்காரரிடம் நீட்டி ,  இது இந்த (தும்மல் போட்டா ஒரு சத்தம் வருமே அந்த சத்தம் பெயர் கொண்ட நிறுவனம்) நிறுவனத்தின் SIM CARD.. இதை நீங்கள் விற்பனை செய்தால் அதிக இலாபம் அடையலாம் என்று சொல்லவும், கடைக்காரரோ .. "வேண்டாம் போமா.. எல்லாரும் BSNL தான் கேட்குறாங்க.. உங்களது கம்பெனி கார்டு சிக்னல் சரியா கிடைக்கலை என்று மறுக்கவும்.. அவள் அந்தப்  பதிலால் தான் அடைந்த பாதிப்பை வெளிக்காட்டிக்காதவாறு , தான் அழைத்து வந்த Trainees களைப்  பார்த்து , வாங்க நாம வேற ஏரியா போகலாம் என்று சொல்லவும்.. இத்தனையையும் பார்த்துக் கொண்டே இருந்த நம் நண்பரின் மனதில் சினிமாவில் சிலரின் மனக்கோட்டை சுக்கு நூறாய் உடைவது போல் ...உடைந்து போய் பேச்சு மூச்சு இல்லாமல் தலை தொங்கியபடி  அடுத்த ஏரியாவுக்கு அவர்கள் கூடவே  சென்று இருக்கிறார்.
மதியவேளை வரவே அனைவரையும் அழைத்துக் கொண்டு ரூ12 க்கு அளவு சாப்பாடு அனைவருக்கும் வாங்கிக் கொடுத்து , பின்னர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறாள் அந்த வீரப் பெண்மணி.
சுமார் 4 மணி இருக்குமாம் அப்போது..இன்னொரு பெண்மணி வந்து Trainees அனைவருக்கும்  "விற்பனைத் தொழிலில் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும் அதை பொருப்படுத்தாது உழைத்தால் வெற்றி நிச்சயம்" என்று வகுப்பு எடுத்தாராம். எப்போதுடா வீட்டிற்கு விடுவாங்க? என்று என்று நினைக்க ஆரம்பித்தார் நம் நண்பர்.
மணி சாயந்தரம் 4.30 ஆனதும்.. கோர்ட் சூட்டோடு வந்த இன்னொரு குண்டு மனிதர் இவர்கள் அனைவரையும் வரவேற்று இரண்டு வார்த்தைகள் பேசி ..பின்னர் "லைட் ஆப் .. கமான் ...ஸ்டார்ட் தி  மியூசிக் ப்ளீஸ் " என்று சொல்லவும்,மெயின் லைட் அணைந்து  டிஸ்கோ லைட் ஒளிர ....பூம் ...பூம்...  என்று ஆங்கில இசை அதிரடியாய் இசைக்க அதற்கு தகுந்தபடி  தனது MRF ஐ அசைத்து அசைத்து ஆடிக் கொண்டே தனது கோர்ட்டை களற்றி வீசினாராம் அந்த குண்டு மனிதர் .
இன்னொரு கும்பலும் சேர்ந்து ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வளைந்து நெளிந்து  ஆட, இவரையும் ஆடக்  கூப்பிட்டார்களாம்.
ஏற்கனவே ஆடிப்போய்... முகத்தில் கலவரம் பற்றியிருந்த இருந்த நம் நண்பர்,  அந்த நபரின் ஆட்டத்தைப் பார்த்து மிரண்டு போய் , ஆளை விட்டால் போதும்டா சாமி.. உங்க வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று வெளியே எஸ்கேப் ஆகி வந்திருக்கிறார். (எதிர்பார்ப்புக்கு மாறுதலாக வேலை இருந்தமையால் மிகவும் வருந்தி விட்டார் ).
பின்னர்தான் தெரிந்ததாம் அது "Stress relief dance" என்று.
இந்த அனுபவத்தை அவர் மூச்சு விடாமல் வெகு சீரியஸ் ஆக என்னிடம் சொல்லி முடிக்கவும்,... நான் மூச்சு விடாமல் சிரித்தபடி இருந்தேன்.
இப்படி தன் முதல் வேலையை துவக்கிய நம் நண்பர் , இன்று  இந்தியா முழுக்க பறந்து சென்று  பலருக்கும்  வேலை வாய்ப்பை வழங்கி வரும் மனித வளத் துறையில் மானேஜர்  பொறுப்பில் இருக்கிறார். 
இப்போ Stress Relief க்கு என்ன பண்ணுறாருன்னு அவரை கேட்காமல் விட்டு விட்டேன்.

நியாய தர்மமிக்க  எந்த வேலையும் நல்ல வேலைதான் .  ஆனால் முதல் அனுபவம் என்பது அவரவருக்கு உரிய ஒரு நினைவுப் பொக்கிஷம் . அதை  மறக்கவே முடியாதுதான் ! உங்கள் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் இன்னும் ஒரு பதிவு ..எனக்கும் ...அட உங்களுக்கும் கிட்டும் !


Best Regards,
RAMA
Visit: http://in.linkedin.com/in/nambikkairama
Click: http://happymorningquotes.blogspot.in/
Join:  http://groups.google.com/group/happy-morning
"Life is growth. If we stop growing, technically and spiritually,We are as good as dead"

பேரின்பன் ஆகு!


உன் முன்னில்
தெரிபவை அனைத்தும்
உன் கண்ணில்; கண்ணிருக்கும்
உன்னில் தெரிபவையே!
பார் பார் ஆழ்ந்துப் பார்!
புறக்கண்கள் மூடி
அகக்கண் திறக்கும்
அவன் காட்சி உணர்!
பேரின்பன் ஆகு!
--
பணிவன்புடன்
ராமா
"No God, no peace. Know God, know peace"

ஜெய மாருதியே வா வா!



குவித்த நற் கரங்களோடு
   குவித்த நல் மனமோடு

குறித்த நாமம் சொல்லி
   ஜெபிக்கும் ஜெய மாருதியே!


விண்ணே வியக்கும் வண்ணம்
   விரித்த உடல் எடுத்தும்
இறை முன்னே பணிந்திடும் 
    இனிமையே சிவ மாருதியே!

இல்லாத வாழ்வு எனும்
  இல்வாழ்வில் இலங்கும் எமை 
நல்வாழ்வு வாழச் செய்யும்
  நலமே  ஜெய மாருதியே! 

ஞாலம்  சிறக்க வந்த
   நல்லமுது மாருதியே!
நானும் சிறக்க வேண்டும் 
   நலமே அருள்  மாருதியே! 

என் ஊன மனதின்
  உள் இருக்கும் கசடுகளை
ஊதித் தள்ளிட வா
  உன்னில் எனை அள்ளிட வா!

- ராமா





Wednesday, August 15, 2012

தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழி!

தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழி! ( General)
Inline image 1


நாட்டின் உரிமை வாழ்வையும் , ஒருமைப் பாட்டையும்  பேணிக் காத்து  வலுப்படுத்த செயற்படுவேன் என்று உளமார  நான்   உறுதி  கூறுகிறேன்.  ஒரு போதும் வன்முறையை நாடேன் என்றும் , சமயம் மொழி வட்டாரம் முதலியவை காரணமாக எழும் வேறுபாடுகளுக்கும் பூசல்களுக்கும் ஏனைய அரசியல் பொருளாதார குறைபாடுகளுக்கும் அமைதி நெறியிலும் அரசியல் அமைப்பின் வழியிலும் நின்று தீர்வு காண்பேன் என்றும் நான் மேலும் உறுதி அளிக்கிறேன் .


உறுதி மொழி! ( For Company)

இந்தியா எனது நாடு !  இந்தியர் அனைவரும் என்  உடன் பிறந்தவர்கள்! என் நாட்டை நான் பெரிதும் நேசிக்கிறேன் ; இந்நாட்டின் பழம் பெருமைக்காகவும் , பன்முக மரபு சிறப்புக்காகவும் நான் பெருமிதம் அடைகிறேன்; இந்நாட்டின் பெருமைக்கு தகுந்து விளங்கிட என்றும் பாடு படுவேன்; என்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள், எனக்கு வயதில் மூத்தோர் மற்றும் சக பணியாளர்கள்  அனைவரையும் மதிப்பேன்; எல்லாரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன்; என் நாட்டிற்கும் என் மக்களுக்கும் என் நிறுவனத்திற்கும் உழைத்திட முனைந்து நிற்பேன் . அவர்கள் நலனும் வளமும் பெறுவதிலேதான் என்றும் மகிழ்ச்சி காண்பேன் என்று உளமார  நான்   உறுதி  கூறுகிறேன்.

வந்தே மாதரம் ! ஜெய் ஹிந்த் !

*****************************

பின் கதை :  எங்கள் அலுவலகத்தில் சுந்திர தின விழாவை கொண்டாட முடிவு எடுத்து  செயற்படும் போது " உறுதிமொழி  இருக்கிறதா?" என்று அலுவலக ஊழியர்  ஒருவர்  கேட்க ...கூகுள் ஆண்டவரிடம் கிடைக்கும் என்று தேடினேன் ..ஊஹும் கிடைக்க வில்லை . வீட்டிற்கு உடனே போன்  செய்து பள்ளித்  தமிழ் பாடப் புத்தகத்தில் இருந்து சுட்டு அப்படியே இங்கு இட்டு விட்டேன் . இனி இணையத்தில் "தேசிய  ஒருமைப்பாட்டு உறுதி மொழி " என்று தேடுபவர்களுக்கு
கூகுள் ஆண்டவர் கைவிட மாட்டார் :)  நன்றி!

[Search Keys:
தேசிய  ஒருமைப்பாட்டு உறுதி மொழி , தேசிய  ஒருமைப்பாடு உறுதி மொழி, உறுதிமொழி ]

Load Counter
spa equipment wholesale