Thursday, March 17, 2011

அனா (தை) ப் பா !


இந்தக் குறிப்பை ,
இன்றாவது  எழுத வேண்டும்
எப்படியாகிலும் எழுத வேண்டும் என்று
சிந்தித்தப்  படியே இருந்தேன்!
காலம் கடந்தே விட்டது!

அன்னை இல்லத்தில்
என்னைசேர்த்து விட்ட நாள் அன்றே
உன் பழையனக்  கழிதல் பட்டியலில்
என் பேரும் இடம் பெற்று விட்டது
விடை பெறும் இந்நேரம்
எனக்கொன்றும் அதிர்ச்சி இல்லை!
எதற்கும் இதை பத்திரமாய்
பத்திரப் படுத்திக் கொள்!

அத்தனையும் நீ என்னிடம் ஏற்கனவே
அள்ளிக் கொண்டதால்
விட்டுச் செல்ல இந்த இறுதிக் குறிப்பு
மட்டுமே எஞ்சியது!
என் தந்தை எனக்குச்  சொன்னதெல்லாம்
சரிதான் என்று எண்ணத் துவங்குகையில்
நான் சொல்வதெல்லாம்

தவறென்று சொல்ல..
என் பிள்ளை நீ பிறந்து
வளர்ந்தும் விட்டாய்!

எழுபதைத்  தாண்டும்போதுதான்
இவைகள் எனக்கே புரிகிறது,
இதில் என் ஏக்கம் எல்லாம்
உனக்கெங்கேப் புரியப் போகிறது?

உன் அன்னை மிகப் புத்திசாலி
தீர்க்க சுமங்கலியாய்
தெய்வந்தனை சேர்ந்துவிட்டாள்!
என் பாவங்களுக்காக தெய்வம் எனை
நின்று கொல்கிறது போலும்?
பாசக் கயிறு பாய்கையில் கூட
பாசம் எனும் மாயை இப்பாவியை
பரிதவிக்கச் செய்கிறது!

பிறவாமை வேண்டும் என்று
பெரியோர்கள்  சொன்னதின் பொருள்
இப்போதுதான் கொஞ்சம்
புரிவதுபோல் இருக்கிறது!
காலத்தை மதிக்காதவனை
காலனும் மதியான்!
இப்படிக்கு ஒரு (தை) ப் பா
உன் னா (தை) ப் பா !

No comments:

Post a Comment

Load Counter
spa equipment wholesale